இதோ, யூதாவுக்கும் எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும்.
1 இதோ, யூதாவுக்கும் எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,
யோவேல் 3:1
2 நான் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப் போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்திரத்தையும் புற ஜாதிக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக் கொண்டதினிமித்தமும்,
யோவேல் 3:2
3 அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப் போட்டு, ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண்குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரயமாகக் கொடுத்ததினிமித்தமும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.
யோவேல் 3:3
4 தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் சகல எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமின்றி அதிசீக்கிரமாய் நீங்கள் சரிக்கட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்வேன்.
யோவேல் 3:4
5 நீங்கள் என் வெள்ளியையும் என் பொன்னையும் எடுத்து, இன்பமும் உச்சிதமுமான என் பொருள்களை உங்கள் கோவில்களிலே கொண்டு போய்,
யோவேல் 3:5
6 யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப் போட்டீர்கள்.
யோவேல் 3:6
7 இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பி வரப்பண்ணி, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து,
யோவேல் 3:7
8 உங்கள் குமாரரையும் உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையில் விற்பேன், இவர்கள் அவர்களைத் தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள், கர்த்தர் இதைச் சொன்னார்.
யோவேல் 3:8
9 இதைப் புறஜாதிக்குள்ளே கூறுங்கள், யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள், யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.
யோவேல் 3:9
10 உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள், பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
யோவேல் 3:10
11 சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள், கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.
யோவேல் 3:11
12 ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக, சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந் தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.
யோவேல் 3:12
13 பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள், ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது, அவர்களுடைய பாதகம் பெரியது.
யோவேல் 3:13
14 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள், நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.
யோவேல் 3:14
15 சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.
யோவேல் 3:15
16 கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார், வானமும் பூமியும் அதிரும், ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.
யோவேல் 3:16
17 என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள், அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும், அந்நியர் இனி அதைக் கடந்து போவதில்லை.
யோவேல் 3:17
18 அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும், ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.
யோவேல் 3:18
19 யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப் போகும், ஏதோம் பாழான வனாந்தரமாகும்.
யோவேல் 3:19
20 ஆனால் யூதாவோ சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.
யோவேல் 3:20
21 நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியை தண்டியாமல் விடேன், கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.
யோவேல் 3:21
No comments