Header Ads

Header ADS

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்

1 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். 
சங்கீதம் 18:1

2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். 
சங்கீதம் 18:2

3 துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன், அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். 
சங்கீதம் 18:3

4 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. 
சங்கீதம் 18:4

5 பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 
சங்கீதம் 18:5

6 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன், தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று. 
சங்கீதம் 18:6

7 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. 
சங்கீதம் 18:7

8 அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது. 
சங்கீதம் 18:8

9 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார், அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 
சங்கீதம் 18:9

10 கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார், காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார். 
சங்கீதம் 18:10

11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார், கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக்கூடாரமாக்கினார். 
சங்கீதம் 18:11

12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது. 
சங்கீதம் 18:12

13 கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார், கல் மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது. 
சங்கீதம் 18:13

14 தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார், மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார். 
சங்கீதம் 18:14

15 அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. 
சங்கீதம் 18:15

16 உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். 
சங்கீதம் 18:16

17 என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். 
சங்கீதம் 18:17

18 என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். 
சங்கீதம் 18:18

19 அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார். 
சங்கீதம் 18:19

20 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார், என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார். 
சங்கீதம் 18:20

21 கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன், நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை. 
சங்கீதம் 18:21

22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன், அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. 
சங்கீதம் 18:22

23 அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 
சங்கீதம் 18:23

24 ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார். 
சங்கீதம் 18:24

25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும். 
சங்கீதம் 18:25

26 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 
சங்கீதம் 18:26

27 தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர், மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். 
சங்கீதம் 18:27

28 தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். 
சங்கீதம் 18:28

29 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன், என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 
சங்கீதம் 18:29

30 தேவனுடைய வழி உத்தமமானது, கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது, தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். 
சங்கீதம் 18:30

31 கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்? 
சங்கீதம் 18:31

32 என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. 
சங்கீதம் 18:32

33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். 
சங்கீதம் 18:33

34 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். 
சங்கீதம் 18:34

35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர், உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். 
சங்கீதம் 18:35

36 என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 
சங்கீதம் 18:36

37 என் சத்துருக்களைப் பின் தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பேன், அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன். 
சங்கீதம் 18:37

38 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன். 
சங்கீதம் 18:38

39 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர். 
சங்கீதம் 18:39

40 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 
சங்கீதம் 18:40

41 அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை, கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை. 
சங்கீதம் 18:41

42 நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். 
சங்கீதம் 18:42

43 ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர், நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள். 
சங்கீதம் 18:43

44 அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள், அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள். 
சங்கீதம் 18:44

45 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள். 
சங்கீதம் 18:45

46 கர்த்தர் ஜீவனுள்ளவர், என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக, என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. 
சங்கீதம் 18:46

47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 
சங்கீதம் 18:47

48 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 
சங்கீதம் 18:48

49 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். 
சங்கீதம் 18:49

50 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார். 
சங்கீதம் 18:50

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.